புதன், 2 டிசம்பர், 2009

பிரதிபலிப்பு

ஆன்டன் செகாவ் - 'சிறுகதைச் சக்கரவர்த்தி' என்று இலக்கிய மேதைகளால் செல்லமாக அழைக்கப்படுபவர். லியோ டால்ஸ்டாய் பெரிதும் பாராட்டிய செகாவ் அவர்களின் "டார்லிங்" என்ற சிறுகதையின் தழுவல் தான் எனது பிரதிபலிப்பு. இந்த கதையின் அடிநாதமாக வரும் களங்கமற்ற காதல் மனித இனம் அனைத்திற்குமே பொதுவானது.
("டார்லிங்" கதையை ஏற்கனவே படித்தவர்கள்.. மேலே படிக்க வேண்டாம்.)

***********************************

ஜானு ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியரின் மகள். வீட்டின் பின் பக்கம் இருக்கும் வேப்பமரத்தடி நிழலில் உட்கார்ந்து காற்றின் ஈர பதத்தை உள் வாங்கியபடி யோசனையில் மூழ்கியிருந்தாள். அவளது சிந்தனையை வேலியின் பின்புறம் இருந்து வந்த குரல் கலைத்தது.

"ச்சே!! இன்னைக்குமா? என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறதுக்குன்னே இந்த மழை வந்து தொலைக்குது" என்று புலம்பினான் திறந்த வெளி நாடக அரங்கத்தின் மேலாளரான விமல்.

"பாத்தீங்களா ஜானு. என் பொழப்ப! என்ன பண்ணி என்ன புண்ணியம்? நல்ல கதை, இயல்பான் நடிகருங்க, தரமான இசை என என பார்த்து நிகழ்ச்சி நடத்தினாலும் பாதி கொட்ட தான் நிரம்பும். மத்தவன் மாதிரி கொச்சையாவோ, கோமளித்தனமாவோ எதாவது பண்ணா அங்க போய் விழுவானுங்க. இப்படி வெயில் காலத்துல தினமும் மழை பெஞ்சா என்னால என்ன செய்ய முடியும்?"

நேற்றும் இப்படி தான் வானம் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் விமல். பாவம் நாளைக்கும் இப்படி தான் பேசுவான். ஜானுவை ஒரு ஆழ்ந்த சோகம் சூழ்ந்து
க் கொண்டது. கண்களில் இருந்து நீர் வந்து விடும் போலிருந்தது. அவன் மீது இரக்கம் உண்டாகி காதலாக மலரும் போலிருந்தது. ஜானுவிற்கு யார் மீதாவது அக்கறை செலுத்த வேண்டும். அன்பு செலுத்தாமல் அவளால் இருக்க முடியாது. தொடக்க காலத்தில் அவள் தன் அப்பாவை நேசித்தாள். இப்போது அவள் அப்பா ஒரு இருட்டறையில் முடங்கி மூச்சு விடவே சிரமப்பட்டு கொன்டிருக்கார். ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு வரும் அத்தையிடம் அன்பு செலுத்தியிருக்கிறாள். பத்தாம் வகுப்பில் தமிழ் எடுத்த மரகதம் டீச்சரை நேசித்திருக்கிறாள்.

'பரவாயில்ல்.. அழகா தான் இருக்கு' என்று அவளைப் பார்க்கும் ஆண்கள் பெருமூச்சு விடுவனர். 'என் செல்லம்' என்று பெண்கள் அவளது கன்னத்தை கிள்ளி எடுத்து திருஷ்டி எடுப்பார்கள்.

ஜானுவிற்கு பிறகு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை. மாலை வேளைகளில் மழை வரக் கூடாது என வேண்டிக் கொண்டாள். மக்களின் மட்டமான இலக்கிய ரசனைகள் குறித்து அவளது தோழிகளிடம் புலம்பினாள். அவள் தந்தை ஒருவாறு யூகித்து பக்கத்து வீட்டு விமலிற்கும், ஜானுவிற்கும் கல்யாணம் பண்ணி வைத்தார். விமலின் அலுவலகத்தில் உட்கார்ந்து கணக்குப் பார்த்தாள். நடிகர்களிடம் சிரித்துப் பேசினாள். கல்யாணமான சில மாதங்களிலே அவள் உடல் பருமனும், முகம் புது பொலிவும் அடைந்திருந்தது. மகிழ்ச்சியான இல்லற நாட்களைத் தொடர்ந்து, விமலுக்கு மஞ்சள் காமாலை வந்து மரணமடைந்தான்.

"ஐயோ!! உங்க ஜானு இப்ப தனியாயிட்டேனே, நெஞ்சு உடைஞ்சு போயிடும் போலிருக்கு" என்று அழுதாள். கோயில், குளம், தனிமை, இருட்டு என முடங்கி கிடந்தாலும் வந்து போறவர்கள் பரிதாபத்தின் பெயரால் அவளது துக்கத்தை அதிகப்படுத்தினர்.

ஆறு மாததிற்கு ஒரு நாள் காற்றில், ஜானு வீட்டு பின்னால் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்திருந்தது. அதை விலை பேச சக்திவேல் என்னும் மர வியாபாரி அவள் வீட்டிற்கு வந்திருந்தான். 'அருமையான மரம்' என்றான். அவளது சோகத்தை அவன் பொருட்படுத்தவில்லை. எது நல்ல மரம் எவை கெட்ட மரம் என்று கண்டுபிடிக்கும் வழியை ஜானுவிடம் சொன்னான். அவனது உற்சாகம் அவளைத் தொற்றிக் கொண்டது. பத்து நிமிடங்கள் தான் எனினும் சக்திவேல் நிறைய நேரம் பேசி விட்டு போனதாக ஜானுவிற்கு தோன்றியது. ஆறுதலாக எப்பவும் பேச வரும் பாட்டி, பேச்சு வாக்கில் மர வியாபாரியின் நல்ல குணத்தை பற்றிச் சொன்னாள். ஜானுவிற்கு சக்திவேலுவை பிடித்து தானிருந்தது. அவர்கள் இருவரும் மனமொத்தி கல்யாண பந்தத்தில் இணைந்தனர்.

மரம் வாங்க சக்திவேல் வெளியூர் சென்ற தினங்களில் எல்லாம், ஜானு தான் கடையில் அனைத்து வேலைகளையும் பார்த்தாள். ஒவ்வொரு மரத்திற்கும் உள்ள பிரத்யேக வாசனையைப் பற்றி அவள் பேசுவாள். தூண், உத்தரம், கழி, பலகை, விட்டம் போன்றவற்றிக்கு எந்த மரம் நல்லது என்று தெரிந்து வைத்திருந்தாள்.

"ஒவ்வொரு வருஷமும் மரத்தின் விலை ஏறத் தான் செய்யுது. ஆனா நல்ல மரம் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அதற்காக எத்தனை இடம் ஏறி இறங்கனும் தெரியுமா?" என்று அதிசயத்தில் உறைவதுபோல் கன்னங்களைக் கைகளால் மூடிக் கொள்வாள் ஜானு.
"ஏன் எப்ப எப்ப பார்த்தாலும் மரம், மரம்ன்னே பினாத்துற? ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊரில் நல்ல நாடகம் ஒன்னு போட்டிருக்காங்க. போலாமா?" என்று ஜானுவின் தோழி அழைத்தாள்.
"நாடகமா?? அதெல்லாம் வேலை இல்லாதவங்களுக்காக தான்னு அவர் சொல்லியிருக்காரு. எங்க ரெண்டு பேருக்கு தான் இங்க பார்க்க வேண்டிய வேலை எவ்வளவு இருக்கு" என்றாள் ஜானு.
ஆறு வருடம் மிக இனிமையாக கழிந்த வாழ்க்கை, மரம் வெட்டும் கத்தி தவறி சக்திவேலுவின் மேல் விழுந்து ஒரு முடிவிற்கு வந்தது.

வாழ்க்கையே சூனியமான ஜானு தன் துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு நிற உடைகளை மட்டுமே அணிய ஆரம்பித்தாள். எதன் பொருட்டும் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தாள். ஜன்னல் கதவுகளை கூட திறக்க மனமில்லாமல் மிகவும் முடங்கி இருந்தாள். எட்டு மாதங்கள் ஆகியும் அவள் மனதில் இருந்து துக்கம் சிறிதும் குறையவில்லை. இந்த எட்டு மாதங்களும் அவளுடன் இருந்த பூனைக்கு இரண்டு நாட்களாக உடம்பிற்கு முடியவில்லை. அதை எடுத்துக் கொண்டு மிருக வைத்தியனிடம் போனாள் ஜானு.

அந்த மிருக வைத்தியனை அவளுக்கு முன்னமே தெரியும். மரம் வாங்குவதற்காக சில முறை வந்திருக்கிறான். இவன் மீது சந்தேகம் கொண்டு அவன் மனைவி அவளது தாய் வீட்டிற்கு எப்பொழுதோ சென்று விட்டிருந்தாள். ஜானுவிற்கு அவன் தனியாக மிக கஷ்டப்படுவதாக தோன்றியது. அடிக்கடி அவனை அதன் பிறகு பார்க்க வந்தாள்.

காய்கறி வாங்கப் போன இடத்தில், "நம்ம ஊர்ல சரியான மிருகப் பராமரிப்பே இல்ல. அதான் எல்லா தொத்து நோயுங்களுக்கும் காரணம்" என்று தெரிந்தவர்களிடம் சொன்னாள். ஆடுமாடுகளைத் தாக்கும் கணை நோய்களை பற்றி அவள் அடுக்கடுக்காக பேசுவாள். ஊராட்சிக்குச் சொந்தமான கசாப்புக் கடைகளின் ஓழுங்கீனங்களைப் பற்றியும் பேசுவாள்.

"உனக்குப் புரியாத விஷயங்களைப் பற்றி பேசாதன்னு எத்கன முறை சொல்லியிருக்கேன்?" என்று கோபப்பட்டான் வைத்தியன்.
"அப்ப.. நான் எதை பத்தி பேசுறது?" என அழுவாள் ஜானு. தன் மீது கோபப்படாதிருக்கும்படி கெஞ்சுவாள்.

ஆனால் அவளை சோகத்தில் மூழ்கடித்து விட்டு மிருக வைத்தியன் வேறு ஊரிற்கு மாற்றலாகி சென்றான். ஜானு இப்போது முற்றிலும் தன்னந்தனி ஆள். உண்பது, உறங்குவது என எது செய்தாலும் அவள் மனம் அதில் ஓட்டாமல் ஒரு இயந்திர தன்மை அவளுள் குடிக்கொண்டது. அவளுக்கென்று தனி அபிப்ராயம் எதுவும் இல்லாமல் இருந்தாள். அவளுக்கு திடீரென்று அழுகை பீறிட்டுக் கொண்டு வரும். இல்லையென்றால் பார்வை சுரத்தில்லமல் எந்த பொருளையாவது பார்த்த வண்ணம் இருக்கும்.

மிருக வைத்தியன் மீண்டும் குடும்பத்தோடு அந்த ஊரிற்கு வந்து சேர்ந்தான். வேலையை விட்டு விட்டு, கால்நடை பண்ணை ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் சொன்னான். ஜானு அவன் குடும்பத்திற்கு அவள் வீட்டைக் கொடுத்து விட்டு, வேப்பமரம் இருந்த இடத்தில் குடிசை ஒன்று போட்டுக் கொண்டாள். வைத்தியனின் மனைவியும், அவர்களது ஐந்து வயது மகன் சேஷாங்க்கும் அவள் வீட்டிற்கு வந்தார்கள். சேஷாங்க் ஜானுவின் பூனை பின்னால் ஓடினான். அந்த பூனை ஜானுவின் கால்கள் பின்னால் போய் நின்றது.

"அத்தை. அது உங்க பூனையா? நான் கொஞ்ச நேரம் அது கூட விளையாடட்டுமா?"

சேஷாங்க் ஐந்து வயதிற்கு இருக்க வேண்டிய உயரம் இல்லாமல் குட்டையாக இருந்தான். புசுபுசுவென்ற கன்னங்கள் அவனுக்கு. அவள் எதுவும் சொல்லும் முன் அவள் காலடியில் பாதுகாப்பு தேடிய பூனைய மேலும் துரத்தினான். அவன் ஓடும் போழுது சிரித்துக் கோண்டே ஓடினான். ஜானுவின் முகத்தில் பழைய சிரிப்பு மீண்டும் தோன்றியது. இது நாள் வரை ஜானுவை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று முறியத் தொடங்கியது. மாலை நேரத்தில் அவன் மேஜை முன் உட்கார்ந்து பாடங்களைப் படித்துக் கோண்டிருந்தபோது ஜானு சேஷாங்க்கையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

"ஒரு தீவு என்பது முழுவதுமாகத் தண்ணீரால் சூழப்பட்ட ஒரு சிறிய நிலப்பகுதி."

"ஒரு தீவு என்பது ஒரு சிறிய நிலப்பகுதி...." என்று ஜானு ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஜானுவுக்கென்று சொந்தக் கருத்துக்கள் மீண்டும் பிறந்தது. சேஷாங்கின் தாய் மீண்டும் சண்டைப் போட்டு ஓரேடியாக தாய் வீட்டிற்கு போய் விட்டாள். வைத்தியனும் மந்தையோடே பல நாள் இருந்து விடுவான். தனியாக விடப்பட்ட சேஷாங்க்கை ஜானு தான் பார்த்துக் கொண்டாள். சேஷாங்க் உயர்நிலைப் பள்ளிக்கு போக தொடங்கி விட்டான்.

"ஸ்கூலுக்கு நேரமாச்சு.. எழுந்திரு செல்லம்."
"கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடேன்" என்று கத்துவான் சேஷாங்க். ஜானுவிற்கு அவனை எழுப்புவது என்றால் மிக சங்கடமாக இருக்கும். கையை கழுத்துக்கடியில் வைத்து, கால்களை மடக்கி... அவன் தூங்குவதையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

ஒருவழியாக அவன் கிளம்பி பள்ளிக்குப் போகும் பொழுது, ஓசைப் படாமல் பின்னாலயே போவாள். பள்ளிக் கூடம் இருக்கும் தெருவை அடைந்ததும் சேஷாங்க் திரும்பி பார்த்து, "நீங்க இப்ப வீட்டுக்கு போ
போறீங்களா இல்லையா?" என்று கத்துவான். ஜானு ஓடி வந்து அவனுக்கு முத்தமிட்டு, கையிலிருக்கும் பழத்தையோ, சாக்லேட்ட்டையோ கொடுப்பாள். அவன் கண்களில் இருந்து மறையும் வரை அங்கயே நின்றிருப்பாள். பின்னர் கண்ணீர் துளிகளை துடைத்துக் கோன்டு கோயிலுக்கு செல்வாள். சேஷாங்க்கின் தாயார் சேஷங்கையும் அழைத்து போகக் கூடாது என கடவுளிடம் வேண்டி அதற்காக அழவும் செய்வாள். யாராவது தெரிந்தவர்கள் அவளிடம் பேசினால், அவளுக்கு உற்சாகம் வந்து விடும்.

"
பாவம்.. இப்பெல்லாம் ஸ்கூல் பசங்களுக்கு நிறைய எழுத தர்றாங்க. அப்புறம் அத படி, இத படின்னு வேற உயிர வாங்குறாங்க."