எனக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு இரண்டு பதிவர் சந்திப்பு நடந்து விட்டது. சென்னையில் இருந்தும் கலந்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. எப்படியும் இந்த முறை பதிவர் சந்திப்பு பார்த்தே தீர வேண்டுமென கட்டிக் கொண்ட கங்கணத்திற்கு இணங்க விழுப்புரத்தில் இருந்து நல்ல வெயிலில் கிளம்பி முதன்முறையாக பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நேரத்தில் சென்றேன். எப்பவும்அனைத்து இடத்திற்கும் தாமதமாக செல்லும் நான் சீக்கிரம் சென்று விட்டேன் போல.
எவராவது வந்திருப்பார்களா எனத் தயங்கி தயங்கி உள்ளே சென்றவுடன், உண்மைத் தமிழன் 'வாங்க' என்று சொன்னார். 'அட.. நான் பதிவர் என்று இவருக்குதெரிந்திருக்கிறதே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளேறினேன். ஆனால்வருபவர்களை எல்லாம் அவர் அப்படி தான் வரவேற்றார் போல. நான் சென்றுதான் நாற்காலிகள் எல்லாம் கீழே இருந்து தூக்கி வந்து வரிசையாக அடுக்கினேன் (சம்பந்தப்பட்டவர்கள் என் சேவையை கவனிக்கவும்). தெரிந்த முகமான கேபிள் சங்கரைப் பார்த்து புன்னைக்க கூட நேரம் அளிக்கவில்லை அவர். வெந்நீர் நிரப்பப்பட்ட சக்கரத்தை காலில் கட்டியிருந்தது போல் ஒரே பரபரப்பு.
வெயிலில் நீண்ட நேரம் வந்ததால் ஏற்பட்ட களைப்பாலும்; மதிய உணவு உண்ணாததாலும்; புழுக்கத்தாலும் சோர்வும், எரிச்சலும் அழையா விருந்தாளியாக வந்து வாட்டியது. பெரிய இறக்கைகள் கொண்ட மின் விசிறி பக்கத்தில் வந்து நான் அமர்ந்ததும், என்னைப் பார்த்து விட்டு 'நீ கேளேன்' சங்கர் அருகில் வந்தார்.
"நீங்க அதி பிரதாபன் தான?"
"இல்ல.. சாம்ராஜ்ய ப்ரியன்."
"ஓ!! நான் சங்கர்" என்று கை கொடுத்து சிரித்தார்.
நான் பதிலுக்கு சிரித்து வைத்தேனே என்று கூட தெரியவில்லை. அவர் என்ன நினைத்தாரோ வேகமாக எழுந்து சென்று விட்டார். எனக்கு ஒரே கோபமாய் வந்து விட்டது. அதிபிரதாபன் மேல். எனக்கு வலைப் பதிவர்களில் அவரை மட்டும் தான் ஓரளவு தெரியும். எனக்கு முன் வந்து எனக்கு துணையாய் இருக்க வேண்டிய அவசியத்தினை மறந்து பொறுப்பில்லாமல் இருக்கிறார். கேட்டால், 'போப்பா.. தலைக்கு மேல வேல' என்கிறார். அது உண்மையா, பொய்யா என தெரியவில்லை. அஜீத்தை நேரில் பார்க்கும் பொழுது தான் தெளிவுப்படுத்தனும்.
சிறிது நேரத்தில் வந்த ஜாக்கி சேகரிடம் சம்பிரதாய விசாரிப்புகளை முடிக்கும் போது, "இராஜ ப்ரியன் எப்படி இருக்கார்?" என கேட்டார். நான் வேறு, இராஜ ப்ரியன் வேறு என்று வெகு சிலருக்கு தான் தெரிகிறது.
உழவன் வந்ததும் தான் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள அண்ணன் சிவராமனும் வந்து விட்டார். இன்னும் கொஞ்சம் 'ரிலாக்ஸ் ஆகி அவர் அருகில் சென்று அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, 'சார் யார்?' என்று என்னைப் பார்த்து ஜ்யோவ்ராம்சுந்தர் கேட்டார். நான் எவ்வளவு யோசித்தும் என்னை வேறு எவரேனும் 'சார்' என்று குறிப்பிட்டுள்ளார்களா என யோசித்துப் பார்த்தேன். ம்ஹூம்.. இல்லை. 'அட, கொஞ்சம் தூரத்திலே இருந்துக் கொண்டால் மரியாதை கிடைக்கும் போல' என்று புரிந்தது. நான் இப்படி யோசிக்கிறேன் என்று தெரிந்தால் அதி பிரதாபனும், அதிஷாவும் மகிழ்வார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் ஏதாவது கேட்டுக் கொண்டே இருக்கனும் போலவே தோன்றுகிறது.
அதுவரை மின் விசிறி பக்கத்தில் அமர்ந்திருந்த என்னை காற்று கம்மியாய் வந்த எதிர்புறத்திற்கு அழைத்து சென்று விட்டார் உழவன். எதிர்புறத்தில் அவர் அருகில் அமர வாய்ப்பு கிடைக்காமல் ஒரு மூலையில் மீண்டும் ஒடுக்கப் பட்டேன். புயலென வந்த 'ஞாநி' என் முன்னால் இருந்த நாற்காலியில் வந்தமர்ந்தார். திடீரென்று அனைவரும் எழுந்து அவரவர் பெயரையும், அவர்கள் எழுதும் வலைப் பக்கத்தின் பெயரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். 'இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு?' எனத் தோன்றியதால் வராத அழைப்பை வந்ததாக காட்டிக் கொண்டு வெளியில் சென்று வசதியாக ஒரிடத்தில் நின்று நோட்டமிட்டேன். பெயர் சொல்லும் வைபவம் எதிர்புறம் சென்றதும் மீண்டும் வந்து அமர்ந்தேன். இதற்காகவாவது ஒரு 'ஃபோரம்' ஆரம்பித்தால் நல்லாயிருக்கும் என நினைத்துக் கொண்டேன். முன்பே வலைப் பதிவர்கள் பெயரெல்லாம் மனனம் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை வீட்டிலே அனைவர் பெயரையும் எழுதி பார்த்து விட்டால்.. 'நீங்க வலைப்பதிவரா?' என்ற கேள்வியை கேட்கும் சங்கடம் தவிர்க்கலாம் அல்லவா?
அப்புறம் எல்லாம் நல்லா தான் போய் கொண்டிருந்தது. ஞாநி திடீரென அவர் பாக்கெட்டில் இருந்து எடுத்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்று ஒன்றாக எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதுவரை ஒளிந்திருந்த பசி தலைத் தூக்க தொடங்கி விட்டது. நல்ல வேளையாக டீயும், இரண்டு பிஸ்கட்டும் வந்தது. கூட்டம் நிறைய இருப்பதால் மீண்டும் இரண்டாவது முறை என் முன்னால் டீ வந்தது என நினைக்கிறேன். இந்த முறை எடுக்கலாமா, வேண்டாமா என யோசித்தேன். எனக்கு முன்பே டீ அளித்ததை மறந்து விட்டார்களா அல்லது இது ஏதாவது சதியா என சந்தேகம் வந்து விட்டது. எவெரெல்லாம் இரண்டு முறை டீ குடிக்கிறாங்க என்று யாரோ உளவு பார்ப்பது போல் இருந்தது. சரி யார் பார்த்தால் என்ன என்று டீ எடுக்கப் போகும் பொழுது மீண்டுமொரு சந்தேகம். டீ கொடுக்கும் பையன் நான் ஓசியாக இரண்டு முறை அருந்தியதை வெளியில் சொன்னால், ஒட்டு மொத்த குழுமத்திற்கு அவப்பெயர் பொதுப் படையாக வந்து விடுமென 'டீ கேன்சல்' செய்து விட்டேன். அந்த பக்கம் வந்த தண்டோராவை பார்த்து புன்னகைத்ததும், 'நல்லாஅயிருக்கியாப்பா?' என முதுகில் தட்டி கேட்டு விட்டு சென்றார்.
நான் எதிர்பார்த்த மற்றொரு ஆள் அதிஷா. நாலே நாலு வார்த்தை பேசலாம் என நினைத்திருந்தேன். பாதியில் வந்தார். முன்னால் சென்றார். அங்கேயே ஐக்கியமாகி விட்டார். சங்கடத்தில் இருந்து தப்பியது அவரா, நானா என தெரியவில்லை.
'ஆங்கில வலைப் பதிவர்கள் எங்கயோ முன்னால் போய் கொண்டிருக்கின்றனர்' என்ற லக்கியின் குரல் கவனத்தை திசை திருப்பியது. அவர்கள் எங்க போயிருப்பார்கள் என்ற அறிய ஆர்வன் மேலிடும் பொழுது, 'அவர்கள் வலைப் பதிவு மூலமாக சம்பாதிக்க ஆரம்பித்து விட்டனர்' என்றார். இது தான் அவர் குறிப்பிட்ட ஆங்கில வலைப்பதிவின் முன்னேற்றமா என்று மனம் கொஞ்சம் அதை இழுத்ததும், திசை திரும்பிய கவனம் வேகமாக 'யூ டர்ன்' எடுத்து விட்டது. (லக்கி மற்றும் பலர் இன்னும் என்னன்னமோ பேசினார்கள். அதையெல்லாம் சரியாக காதில் வாங்கவில்லை அல்லது விழவில்லை.)
ஒருவழியாக நர்சிம் பதிவர் சந்திப்பினை முடித்து வைக்க, கீழே வந்தேன். யுவ கிருஷ்ணா அருகில் சென்று பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல் நின்றிருந்தேன்.
'நீங்க தினேஷ் தானே!'
எனக்கு ஆச்சர்யமாகி விட்டது. இதற்கு முன் பல தடவை நான் அவரை கிழக்கு அலுவலகத்தில் பார்த்திருக்கேன். ஒருமுறை நேரிலும், பலமுறை இணையத்திலும் பேசியிருக்கிறென். முதல் தடவை பேசும் பொழுது, வேற்று கிரகத்து ஜந்துவை பார்ப்பது போலவே பார்த்து.. "நீங்க வலைப்பதிவரா? நாம் இதற்கு முன் பேசியிருக்கோமா?" எனத் தெளிவாய் கேட்டு விட்டு, "சாரிங்க நிறைய பேர பார்க்கிறேனா.. யாரு என்னன்னு தெரியல!!" என்று எஸ் ஆகி விட்டார்.
அவர் அருகில் சென்று நின்றதன் நோக்கம், அவருடன் ஒட்டிக் கொண்டு வேளச்சேரி அருகேயோ அல்லது பக்கத்திலிருக்கும் பேருந்து நிறுத்தத்திலோ இறங்கிக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். அவர் மிக ஆர்வமாக எவருடனோ பேசிக் கொண்டிருந்தார். நர்சிம் அவர்கள் மின் தூக்கி கொடுக்க ஒத்துக் கொண்டார். ஆக பதிவர் சந்திப்பு என்னளவில் நன்றாகவே முடிந்தது.
டிஸ்கி 1: முதலில் காற்றுக்காக நானும் முதல் வரிசையில் தான் மின் விசிறி அருகில் அமர்ந்திருந்தேன். (நல்லவேளை அஷோக் வரும் முன் இடம் மாறி விட்டேன். இல்லை எனக்கும் ஒரு சாயம் பூசியிருப்பார்.)
டிஸ்கி 2: அடிப்படை உறுப்பினராக இப்பொழுது சேர்ந்து.. கஷ்டப்பட்டு நிறைய புத்தகமெல்லாம் படித்து, எவருக்கும் புரியாத சில பதிவுகள் எழுதி, தேர்ந்தெடுத்த பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போட்டு.. முப்பது வருடத்திற்கு பிறகு இந்த குழுமத்திற்கு தலைவன் ஆவேன் என நினைக்கிறேன்.
டிஸ்கி 3: நான் இவ்வளவு சொல்லியும் நான் வலைப் பதிவரா.. என சந்தேகம் கொள்பவர்கள், நான் இன்று காலையில் எழுதிய 'நல்ல கடவுள்!!' என்ற கதை படித்து தயவு செய்து நம்புங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
11 கருத்துகள்:
:)
//பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்ப்பது போல் நின்றிருந்தேன்//
உன்னையறிந்தவன் நீ.. உலகத்தில் போராடலாம்...
போப்பா, தலைக்கு மேல வேலையெல்லாம் இல்ல. தலவலி, அதான் வரல.
//நான் சென்றுதான் நாற்காலிகள் எல்லாம் கீழே இருந்து தூக்கி வந்து வரிசையாக அடுக்கினேன் //
//நான் பதிலுக்கு சிரித்து வைத்தேனே என்று கூட தெரியவில்லை. அவர் என்ன நினைத்தாரோ வேகமாக எழுந்து சென்று விட்டார்//
நீங்க எடுத்து வந்த நாற்காலிகளை எடுத்து வரிசையா அடுக்கதான் போனேனுங்க, வேற எதுவும் இல்லை :)
///////டிஸ்கி 3: நான் இவ்வளவு சொல்லியும் நான் வலைப் பதிவரா.. என சந்தேகம் கொள்பவர்கள், நான் இன்று காலையில் எழுதிய 'நல்ல கடவுள்!!' என்ற கதை படித்து தயவு செய்து நம்புங்கள்.//////
ஆஹா !
ஒரு வார்த்தை கேள்விக்காக இவளவு எழுதவேண்டுமா ?
இப்பொழுதெல்லாம் பதிவர்கள் என்று நம்மை வெளிப்படுத்த அதிகமாக பதிவர்களைப் பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன் .
மகிழ்ச்சி சிறந்த பகிர்வு . மிகவும் ரசிக்கும் வகையில் தொடுத்து எழுதி இருக்கீங்க .
தொடரட்டும் உங்களின் எழுத்துப் பணி .
ஏதாவது சாப்பிட்டுட்டு தெம்பா போயிருக்கலாம்ல்ல...
சரிதான் வாத்தியாரே
அண்ணன் அசோக்கிற்கு, நீங்கள் உங்களையறியாமலேயே போராடுகிறீர்கள்.
@shortfilmindia.com
@விதூஷ்
;)
@டி.ஆர். அஷோக்
அப்படியா சொல்றீங்க!!
@அதி பிரதாபன்
அடிக்கடி கொஞ்சம் உங்க தலையை காட்டுங்க அண்ணா. மறந்துட போறேன்!!
@சங்கர்
அப்ப சரி. :D
@பனித்துளி
நாம் இருப்பது விளம்பர யுகம் :-)
@துபாய் ராஜா
ஆர்வ மேலிட்டால்.. சாப்பிடனும் என தோன்றவில்லை.
@இராஜ ப்ரியன்
நான் வாத்தியாரா?? என்ன கோவம் ஐயா உங்களுக்கு என் மேல். :P
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக